25 September 2010

தமிழனின் உண்மையான வரலாறு : "ஆதிச்ச நல்லூர்"

தமிழனின் உண்மையான வரலாறு : "ஆதிச்ச நல்லூர்"

ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப. பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன்

”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.

“அதன் பின்பு வந்தவர்தான் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த ரியா. இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்”

“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.

”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”

அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.

அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.

”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.

“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.” என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.

சரி….இங்கு எடுத்துச் சென்ற பொருட்களையெல்லாம் இங்கேயே கொண்டு வந்து சேர்த்து ஒரு அருங்காட்சியகமாவது வைக்கலாமே… என்றேன்.

”அருங்காட்சியகமும் வரட்டும். ஆனால் அதற்கு முன்னதாக பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிற தமிழனின் வரலாறு வெளியே வரட்டும். அதுவும் உலக வரலாறுகளையே புரட்டிப்போட இருக்கிற உண்மையான வரலாறு.”என்றார் அழுத்தம்திருத்தமாக.

யார் இதைச் செய்ய வேண்டியது?

”மத்திய அரசு.”

அதைச் செய்யவைப்பது?

”மாநில அரசு.”

மூல பிரதி "WWW.PAMARAN.WORDPRESS.COM"

COPIED FROM PAMARAN ARTICLES :
http://pamaran.wordpress.com/2010/07/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/

No comments:

Post a Comment